
மதுரையில் இறந்து கிடந்த நாயை அடக்கம் செய்த தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் ரோடு கடச்சனேந்தல் பகுதியில் சாலை ஓரமாக நாய் ஒன்று இறந்து கிடந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்து கொண்டே சென்ற நிலையில் அந்த வழியாக காலையில் வாக்கிங் சென்ற தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா மாநில பொதுச் செயலாளர் கவியரசு மற்றும் மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வகுமார் ஆகியோர் மற்றவர்களை போல் வேடிக்கை பார்த்து செல்லாமல் உடனடியாக மம்பட்டி கடப்பாரையுடன் களத்தில் இறங்கினர்.
பின்னர் அருகில் உள்ள காலி இடத்தில் குழியை தோண்டி நாயை அடக்கம் செய்து பாலை ஊற்றி இறுதி சடங்கை செய்தனர்.
நாய் இறந்து கிடப்பதை வேடிக்கை பார்த்து சென்றவர்களுக்கு மத்தியில் அந்த நன்றியுள்ள வாயில்லா ஜீவனை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த சமூக சேவகர்கள் கவியரசு மற்றும் வி.பி.ஆர் செல்வக்குமாரை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் பாராட்டினர்.