
38 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் மரியாதை: கொண்டாடித் தீர்த்த மதுரை ரசிகர்கள்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா ஆகியோரது வெற்றி கூட்டணியில், கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியாகி 125 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய வெற்றித் திரைப்படம் முதல் மரியாதை.
படத்தின் பாடல் என்று பட்டிதொட்டி எங்கும் ரசிகர்களை 85 காலகட்டத்தில் முணுமுணுக்க வைத்ததது.படத்தில் பாடல்களை எழுதிய வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா ஆகியோருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
மண்ணின் மனத்தோடு எடுக்கப்பட்டதால், இன்றைக்கும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுகிறார்கள்.தற்போது நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் மதுரை மற்றும் தமிழகம் முழுவதும் 50 திரையரங்குகளில் வெள்ளியன்று வெளியாகி முதல் மரியாதை படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அதிலும் எதார்த்த சினிமாக்களை தங்களது தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் மதுரை சினிமா ரசிகர்கள் வயது வித்தியாசம் இன்றி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முதல் மரியாதை படத்தை கொண்டாடி தீர்க்கின்றனர்.
அப்போதைய கல்பனா திரையரங்கம் என சினிமா ரசிகர்கள் கொண்டாடிய தற்போதைய மதுரை அண்ணாமலை திரையரங்கம் முன்பாக சிவாஜி பைன் ஆர்ட்ஸ் குணசேகரன் தலைமையில் , சிவாஜி பைன் ஆர்ட்ஸ் ஆசிரியத்தேவன் முன்னிலையில் கூடிய ஏராளமான சிவாஜி கணேசன் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஞாயிற்றுக்கிழமை மாலை நேர காட்சியை அலங்கரித்தனர்.
டிக்கெட் விற்பனையான சில மணி நேரத்திலேயே திரையரங்கம் நிறைந்து ஹவுஸ் ஃபுல் காட்சியாக மாறியது அனைவரையும் வியக்க வைத்தது.
வயது வித்தியாசம் இன்றி கூடிய ரசிகர்கள் திரையரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஆதரவு குரல் எழுப்பி தங்களது இரண்டாம் மரியாதையை கொடுத்தனர்.
திரைப்படம் குறித்து நம்மிடம் பேசிய சிவாஜி பைன் ஆர்ட்ஸ் செய்தி தொடர்பாளர் ஆசிரியத்தேவன், உலகத்தில் ஒரே வானம் ஒரே பூமி அதே போல் ஒரே நடிகர் செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தான். அவரது திரைப்படங்கள் கர்ணன் ராஜபார்ட் ரங்கதுரை, பட்டிக்காடா பட்டணமா இவையெல்லாம் எப்படி மறுபடியும் டிஜிட்டல் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டதோ அதனை விட மாபெரும் வெற்றியை முதல் மரியாதை பெறும் என சிலாகித்துக் கூறினார். மேலும் முதல் மரியாதை படத்தை பொறுத்தவரை மலைச்சாமி என்ற கதாபாத்திரத்திற்கு மிக கச்சிதமாக பொருத்தப்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அதனை சரியாக செய்தவர் இயக்குனர் பாரதிராஜா என கூறியதோடு, சித்திரை திருவிழாவிற்கு முன்னர் சிவாஜி திருவிழாவை கொண்டாடுகிறோம்என பெருமிதத்தோடு குறிப்பிட்டார். பேட்டியின் போது தேனூர் சாமிக்காளை உடன் இருந்தார்
இனி எத்தனை படங்கள் வந்தாலும் நடிகர் திலகத்திற்கு தனி மவுசு தான் போல!