
நெல் கொள்முதல் நிலையங்களில் கிலோவுக்கு 50 பைசா கமிஷன் : பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் மதுரையில் பேச்சு.
மதுரை திருமங்கலத்தில் பாஜக விவசாய அணி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாய அணி மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவர், செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன், பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார், விவசாய அணி மதுரை மாநகர் மாவட்ட தலைவர் துரைபாஸ்கர், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரத்தினசாமி மற்றும் சுரேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார். பின்னர் அவர் பேசுகையில்:- நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு கிலோவுக்கு 50 பைசா கமிஷன் கொடுத்தால்தான் நெல்லை விற்கும் சூழ்நிலை உள்ளது. உரிய சேமிப்பு கிடங்கு இல்லாமல் லட்சக்கணக்கான டன் நெல்மணிகள் மழையினால் வீணாகிறது. மத்திய அரசின் விவசாய திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல மாநில அரசு சுணக்கம் காட்டுகிறது.
தமிழக வேளாண் பட்ஜெட் வெறும் கண்துடைப்பு தான். இந்த பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வாசனை திரவியம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.