
பல்லடம் அருகே முல்லைவனம் தாவரவியல் பூங்காவிற்கு தீ வைத்த மர்ம நபர்களால் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தீயில் எரிந்தன.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் உட்பட்ட கொத்து முட்டிபாளையத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் முல்லைவனம் என்ற தாவரவியல் பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. வேம்பு, புங்கன், பூவரசம், அத்தி, நெல்லி போன்ற பல வகையான 7,000 மரக்கன்றுகள் ஊர் மக்களால் நடப்பட்டு, சொட்டுநீர் பாசனம் முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இரண்டு மர்ம நபர்கள் முல்லை வனம் பகுதியில் காய்ந்த புற்களுக்கு தீ வைத்து உள்ளனர். வனத்தில் தீ வைக்கும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. புற்களுக்கு வைக்கப்பட்ட தீ வேகமாக பரவியதால் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தீயில் எரிந்து நாசம் அடைந்தது.
அப்பகுதி மக்கள் வனத்தில் பரவிய தீயினை தண்ணீர் ஊற்றி, ஒரு மணி நேரத்தில் அணைத்தனர். ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதேபோன்று மர்ம நபர்கள் வனப் பகுதிக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. தோடர்ந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.