
இந்தியாவின் முன்னணி வர்த்தக மின் வாகன உற்பத்தியாளரான அல்டிகிரீன், தமிழ்நாட்டில் தனது 3-வது விற்பனை டீலர்ஷிப் மையத்தை மதுரை ஆரப்பாளையம் புட்டுத்தோப்பு பகுதியில் தொடங்கியுள்ளது.
இது நாடு முழுவதும் சமீபகாலத்தில் துவக்கப்பட்ட 25-வது சில்லரை விற்பனை மையமாகும். கோவையில் டீலர்ஷிப் மையத்தை அமைத்த மகாசக்தி குழுமமே மதுரையிலும் டீலர்ஷிப் மையத்தை அமைத்துள்ளது.
இந்த விற்பனை மையத்தை அல்டிகிரீன் தலைமை செயல் அதிகாரி அமிதாப் சரண் தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:
தமிழ்நாட்டில் துவக்கப்பட்டுள்ள இந்த 3-வது டீலர்ஷிப் மையத்தின் வாயிலாக தேசிய அளவில் மின் வர்த்தக வாகனங்களுக்கான வலுவான கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துச் சென்றுள்ளோம்.
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் இரண்டாம் நிலை நகரங்களில் வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சந்தை கட்டமைப்பை உருவாக்கும் செயல்திட்டத்தின்படி, மதுரையில் இந்த விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பல்வேறு பிரிவுகளில் உலகத் தரம் வாய்ந்த வாகனங்களை உற்பத்தி செய்து அளிக்க திட்டமிட்டுள்ளோம். இவற்றின் விற்பனைக்காக மகாசக்தி குழுமத்துடன் கூட்டுறவை தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மகாசக்தி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டி.கே தனசேகரன் பேசுகையில், அல்டிகிரீன் நிறுவனத்துடன் இணைந்து மதுரையில் ஒரு மின்சார வாகன புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம்.
தமிழ்நாடு அரசின் புதிய மின் வாகனக் கொள்கையின் படி, தமிழ்நாட்டில் மின் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம், சாலை வரி, பதிவு கட்டணம் போன்றவை ரத்து செய்யப்படுகிறது. மேலும் மின் வாகனங்களுக்கு மாறும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தக் கூடியதாகவும், கட்டுப்படியாகக் கூடிய விலையில் கிடைக்கச் செய்யும் வகையிலும் வாகனங்களை உருவாக்கி காற்று மாசற்ற போக்குவரத்தை கட்டமைக்கும் நோக்கத்தினை நிறைவேற்றும் பணிகளை விரைவுபடுத்துவோம் என்றார்.