
மதுரை காந்தி N.M.R. சுப்பராமன் மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவிகளின் வசதிக்காக அரசு பேருந்து போக்குவரத்தை பூமிநாதன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
திருப்புவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் அனுப்பானடியில் உள்ள மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
இவர்கள் கல்லூரிக்கு சென்று வருவதற்கு காலை மற்றும் மாலை நேரத்தில் பேருந்து வசதி ஏற்பாடு செய்து தருமாறு
மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பூமிநாதன் அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
உடனடியாக நடவடிக்கை எடுத்த பூமிநாதன் எம்எல்ஏ திருப்புவனத்தில் இருந்து என்.எம்.ஆர் சுப்பராமன் கல்லூரி வழியாக அனுப்பானடி பேருந்து நிலையம் வந்து பெரியார் பேருந்து நிலையம் செல்வதற்கும்,
மாலையில் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அனுப்பானடி வழித்தடம் வந்து கல்லூரியில் இருந்து திருப்புவனம் செல்வதற்கும் நடவடிக்கை எடுத்தார்.
இன்று வெள்ளிக்கிழமை கல்லூரி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் பேருந்து போக்குவரத்தை மாணவிகளின் பயன்பாட்டிற்கு பூமிநாதன் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் செந்தாமரைகண்ணன், செல்வி கார்மேகம், தமிழ்ச்செல்வி மாயழகு, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் கல்லூரி தாளாளர் ஜனரஞ்ஜனி பாய், கல்லூரி முதல்வர் முனைவர் கோமதி , துணை முதல்வர் முனைவர் மஹிமா, நிர்வாக ௮திகாரி ஸ்ரீரேகா, ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.