
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் எருமல் கிராமத்தைச் சேர்ந்த K.இராஜசேகர் என்பவர் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் இயங்கி வரும் பாவா மோட்டார்ஸ் நிறுவனத்தில் கடந்த 28. 12 .2020- ல் ஹோண்டா கம்பெனியின் யூனிகான் 160 ஏபிஎஸ் என்ற சிவப்பு கலர் இருசக்கர மோட்டார் வாகனத்தை ரூபாய்- 1,22,078/- கொடுத்து வாங்கியுள்ளார்.
இதில் இன்சுரன்ஸ் தொகை, ஆர் டி ஓ அலுவலக செலவு என மேற்படி தொகையில் சேர்த்து வாங்கியுள்ளனர்.
தனக்கு இரு சக்கர வாகனத்தை விற்ற நிறுவனம் வாகனத்தை விற்கும் போது தலைக்கவசம் இலவசமாக வழங்குவதாக கூறிய நிலையில் தனக்கு வழங்காததால் பல முறை கேட்டும் அலைக்கழித்து வந்த நிலையில் மேலும் வாகனப்பதிவு மற்றும் இன்சூரன்ஸ்க்கு ஆகும் செலவைவிட அதிகப்படியான தொகையை வாங்கி தன்னை ஏமாற்றி விட்டதாக மன உளைச்சலுக்கு உள்ளான இராஜசேகர் தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நல சங்கத்தினை நாடினார்.
அப்போது அச்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு- (FEDCOT) வேளாண்மை இயக்குனருமான டாக்டர். K.திருமுருகன் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச் சங்கத்தின் மாவட்ட வழக்கறிஞர் P.ஜீவானந்தன் ஆலோசனையின்படியும் இரு சக்கர வாகனத்தை வாங்கிய நுகர்வோராகிய இராஜசேகர் நாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கினை விசாரித்த நாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் P.தஷ்ணாமூர்த்தி, உறுப்பினர்கள் K.N.கமல்நாத், M.சிவகாமி செல்வி ஆகியோர்
புகார்தாரருக்கு எதிர்தரப்பினர் முழு அளவிலான தலைக்கவசம் தரவேண்டும் என்றும்,
புகார்தாரருக்கு, எதிர்தரப்பினர் சேவைக் குறைபாடு, மன உளைச்சல் ஏற்படுத்தியமைக்காக ரூ. 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) செலுத்தி வைக்க வேண்டும் என்றும்,
புகார்தாரருக்கு ஏற்பட்ட இந்த வழக்கு செலவுத் தொகைகளுக்காக எதிர்தரப்பினர் ரூ.25,000/- (ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் மட்டும்) செலுத்தி வைக்க வேண்டும் என்றும்,
மேற்கண்ட அனைத்து தொகைகளையும் இந்த உத்தரவு பகிரப்பட்ட இரண்டு மாத காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் புகார் தாக்கல் செய்த தேதி முதல்மேற்கண்ட அனைத்து தொகைகளுக்கும் ஆண்டொன்றிற்கு ரூ.100/- க்கு (ரூபாய் ஒரு நூறு மட்டும்) 12% வட்டி கணக்கிட்டு அனைத்து தொகைகளை செலுத்தி முடிக்கும் வரை செலுத்த வேண்டும் என்று இந்த ஆணையம் உத்தரவிடுகிறது. என தீர்ப்பளித்தனர்.