
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அரசரடி முக்கு கடை K.சுப்பு உணவகத்தில் பொங்கல் பானை போன்ற புரோட்டா அறிமுகம்.
புரோட்டாவில் இத்தனை வெரைட்டிகளா என வியக்கும் அளவுக்கு விதவிதமான புரோட்டாக்களை அறிமுகப்படுத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த அரசரடி முக்குகடை K.சுப்பு அசைவ உணவகத்தின் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன்.
மற்ற கடைக்காரர்களை போல் அல்லாமல் அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்றவாரும்,பண்டிகை காலங்களிலும் பல்வேறு வடிவிலான புரோட்டாக்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே கொரோனா காலகட்டத்தின் போது மாஸ்க் போன்ற புரோட்டாவும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் எனும் விழிப்புணர்வு ஏற்படுத்திய காலகட்டத்தில் மஞ்சப்பை போன்ற புரோட்டாவை தயாரித்தும், சமீபத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 2023 எண் வடிவிலான புரோட்டாவை அறிமுகப்படுத்தி அனைத்து மக்களின் பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் பொங்கல் பானை போன்றும், பானை நடுவில் தை மாதத்தை குறிக்கும் வகையில் தை என்ற வாசகத்துடனும் புரோட்டாவை அறிமுகப்படுத்தி அசத்தி உள்ளார்.
இதுகுறித்து அரசரடி முக்கு கடை K.சுப்பு அசைவ உணவகத்தின் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில்:-. இந்த கடையை அறுபது வருடங்களாக நடத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். வெறும் புரோட்டாவை மட்டும் மக்களுக்கு விற்பனை செய்யாமல் விதவிதமாக புரோட்டாவை தயாரித்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
ஏற்கனவே நாங்கள் மஞ்சப்பை புரோட்டா வும், 2023 எண் வடிவிலான புரோட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளோம். தற்பொழுது தை பொங்கலை முன்னிட்டு பொங்கல் பானை போன்று புரோட்டாவை அறிமுகப்படுத்தினோம். இதற்கு மக்களின் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னமும் பல்வேறு வடிவிலான புரோட்டாவை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம் என கூறினார்.