
மயிலாடுதுறை சிதம்பரம் மார்க்கத்தில் உரிய நேரத்தில் இயங்காத அரசு பேருந்துகளால் மக்கள் பெரும் அவதி! உடனே நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை! மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் மார்க்கத்தில் தினமும் அரசு சார்பிலும், தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு சார்பில் காலை நேரத்தில் இயக்கப்படுகின்ற அரசு பேருந்துகள் கடந்த சில மாதங்களாக உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை என்றும், அதனால் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் செல்லும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளுக்கும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. அதேபோல சிதம்பரம் கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பணியாற்றி வருகின்ற மயிலாடுதுறை மணல்மேடு கிராமங்களை சார்ந்த நூற்றுக்கணக்கான அலுவலர்கள் தொழிலாளர்களுக்கு கூட காலை வேலைகளில் உரிய நேரத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிக்கு வருவோர் தற்போது கைரேகை பதிவு செயல்படுத்தப்படுவதால், உரிய நேரத்தில் இயக்கப்படாத பேருந்துகளால் வருகை பதிவேட்டில், குறித்த நேரத்தில் கையெழுத்திட மற்றும் பதிவு செய்திடவும் முடியாமல் அவர்களது சம்பளத்தில் பிடித்தம் மற்றும் பகுதி நேரஅனுமதி விடுப்பு அடிக்கடி எடுக்கவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஏதோ ஒரு நாள் அரசு பேருந்து காலம் தாமதமாகவோ நேரம் கடந்தோ சாலையில் ஏற்படுகின்ற வாகன நெரிசல் மற்றும் இதர காரணங்களால் இயக்கப்படாமல் இருக்கலாம். அது தவிர்க்க முடியாதது. ஆனால் தொடர்ந்து காலை வேளையில் உள்ள அத்தனை அரசு பேருந்துகளும் முறையாக இயக்கப்படாததால் தனியார் பேருந்துகள் அதிக லாபத்துடன் இயங்க வாய்ப்பு ஏற்படுகிறது. அதே சமயம் பெரும் அவதியையும் நஷ்டத்தையும் எதிர் நோக்குகின்ற மயிலாடுதுறை பகுதி வாழ் மாணவர்கள் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மயிலாடுதுறை சிதம்பரம் மார்க்கத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் நேரத்தை உறுதி செய்யவும், சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் திருமுருகன்