
மதுரை தல்லாகுளத்தில் கட்டப்பட உள்ள பறக்கும் மேம்பாலத்தை தமுக்கத்தில் இருந்து கோரிப்பாளையம் வரை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை தல்லாகுளத்தில் இருந்து கோரிப்பாளையம் வரை 175 கோடியில் புதிய பறக்கும் மேம்பாலம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு அதற்கான பணியை தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மேம்பால பணியால் தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம் வரை உள்ள கள்ளழகர் மண்டகப்படிகள் பாதிக்கப்படும் என்று கள்ளழகர் கோவில் பாரம்பரிய மண்டகப்படிதாரர்கள் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:-
மதுரை சித்திரை திருவிழாவில் எதிர்சேவை நடைபெறும் பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெறுவது சித்திரை திருவிழாவை சீர்குலைக்கும் வகையில் அமையும். இது குறித்து அதிகாரிகளிடமும் முதல்வரிடமும் கூறியும் ஒப்பந்த பணிகளை தொடங்கியுள்ளனர்.
மேம்பால பணிகளால் கள்ளழகர் வரும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு அசம்பாவிதங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அழகர் கோவில் சாலையில் உள்ள பாரம்பரியமிக்க மண்டகப்படிகளை மேம்பாலம் பணிகளுக்காக இடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு சித்திரை திருவிழா கூட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த சூழலில் இதுபோன்ற மேம்பால பணிகளால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும்.எனவே இந்த பறக்கும் மேம்பால திட்டத்தை தமுக்கம் பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலில் இருந்து கோரிப்பாளையம் வரை என மாற்றியமைக்க வேண்டும்.
ஏற்கனவே அவுட்போஸ்ட் பகுதி வரை மேம்பாலம் இருக்கும்போது மீண்டும் தல்லாகுளம் பகுதியில் இருந்து கோரிப்பாளையம் வரை மேம்பாலம் அமைத்தால் கள்ளழகர் சித்திரை திருவிழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே இந்த பறக்கும் மேம்பாலத்தை தமுக்கம் பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலில் இருந்து கோரிப்பாளையம் வரை மாற்றி அமைக்க வேண்டும். மாற்றுத்திட்டத்தில் மேம்பாலப் பணிகளை தொடங்காவிட்டால் பொதுமக்களை இணைத்து போராட்டம் நடத்துவோம் என கூறினர்.