தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை நேரலை செய்யப்பட்டது
மதுரை, அக்.12:
மதுரை அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நேரலை மற்றும் நிகழ்நேர நரம்பியல் சிகிச்சை செயல்முறை கண்காணிப்பு பயிலரங்கு அக்.12-ஆம் தேதி நடைபெற்றது. இத்தகைய நேரலை அறுவை சிகிச்சை பயிலரங்கு நடைபெறுவது தென் தமிழகத்திலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் பார்த்தசாரதி திருமலா மேற்பார்வையில், மதுரை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஷ்யாம், டாக்டர் கெவின் ஜோசப், நரம்பியல் மயக்கமருந்தியல் நிபுணர் டாக்டர் நிஷா ஆகியோர் இணைந்து மிகவும் சிக்கலான மூளைக் கட்டிகள் மற்றும் முதுகு தண்டுவடக் கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சையை செய்தனர்.
சென்னை மருத்துவக் கல்லூரியின், இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோசர்ஜரி ஓய்வு பெற்ற இயக்குனர் பேராசிரியர் ரங்கநாதன் ஜோதி மற்றும் பேராசிரியர் ஜெகன் நாராயணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பயிலரங்கு நிகழ்வுகளை, துவக்கிவைத்து வழிநடத்தினர்.
இந்த ஒருநாள் பயிலரங்கில் 3 நோயாளிகள் பயன் அடைந்தனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 40 நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் காணொலி வாயிலாக இந்தப் பயிலரங்கில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின் பயிற்சி நேரமானது நவீன நரம்பியல் கண்காணிப்பு தொழில்நுட்பங்களையும், நரம்பியல் புற்றுநோய் பிரிவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அறிந்து கொள்ள பங்கேற்பாளர்கள் அறிந்துகொள்ள உதவியாக இருந்தது. நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் முன்னோடி மருத்துவமனை என்ற அடிப்படையில், சமீபத்திய மேம்பாடுகள் குறித்த தகவல்களைக் கொண்டு சேர்ப்பதிலும், பயிலரங்குகள் வாயிலாக நோயாளிகளை பலனடையச் செய்வதிலும் மதுரை அப்போலோ மருத்துவமனை மகிழ்ச்சி அடைகிறது.