
நீங்கள் ஒரு நாட்டின் மன்னர். உங்கள் நாடு அடிமைப்பட்டு விட்டது. ஆனால் நீங்கள் சரணடைய மறுக்கிறீர்கள். நீங்கள் மிகவும் நேசிக்கும் நாட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் எதிரியோ மிக மிக வலுவானவன். உங்கள் படைகளை உடைக்கிறான். உங்கள் தளபதிகளை விலைக்கு வாங்குகிறான். உங்கள் விசுவாசிகளை மிரட்டி கடத்துகிறான். உங்களுக்கு ஆயுதங்கள் கிடைக்காமல் செய்கிறான். கிட்டத்தட்ட உங்களால் போர் நடத்த முடியாத வகையில் நீங்கள் முடக்கப்படுகிறீர்கள்.
இப்போது உங்கள் முன் இருப்பது இரண்டு வாய்ப்பு. இனி எனக்கு எனது ராஜ்ஜியம் அவசியமில்லை. என்னால் என் எதிரியை வெல்ல முடியாது. என்னைச் சுற்றி இருப்பவர்கள் துரோகிகள். அனைவரும் எதிரியோடு கரம் கோர்த்துக் கொண்டு உள்ளார்கள். என்னிடம் படைகள் இல்லை. நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன் என்று உங்கள் ராஜ்ஜியத்தையும், அதன் மக்களையும் ஒரு கொடுங்கோல் அரசனிடம் விட்டு விட்டு செல்லப் போகிறீர்களா அல்லது, புதிய படைகளை திரட்டுவேன். அஞ்ச மாட்டேன். என் இறுதி மூச்சு இருக்கும் வரை, என் நாட்டை மீட்க போராடுவேன் என வெற்றி தோல்வி பற்றி கருதாமல் புதிய படைகளை திரட்டி போரிட முயற்சி செய்வீர்களா ?
நான், புதிய படைகளை திரட்டி, என் சக்தி முழுவதையும், என் திறன் முழுவதையும் போரிட செலவு செய்வேன். தோல்வி கண்டு துவள மாட்டேன். மக்கள் மீது நம்பிக்கை வைப்பேன். மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புவேன். ஏற்றுக் கொள்ளும் வரை போராடுவேன். அதற்காக உழைப்பேன்.
இதைத்தானே ராகுல் காந்தி செய்து வருகிறார் ? ராகுல் காந்தியை பப்பு என்றும், செல்வச் சீமான் வீட்டு பிள்ளை என்றும், அரசியல் தெரியாதவர் என்றும், மோடி முன்னால் ராகுல் ஒன்றுமே இல்லை என்றும் ஆயிரம் விமர்சனங்கள் செய்யலாம். ராகுலின் நிலையிலிருந்து சூழலைப் பாருங்கள். India Against Corruption என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பல்வேறு வடிவங்களில் ஒரு வடிவமாக, 2014ம் ஆண்டில் மிகப்பெரிய ஒரு narrativeஐ உருவாக்கி, காங்கிரஸை வீழ்த்தியதோடு அல்லாமல், காங்கிரஸை எழ விடாமல் செய்து வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு நிதியளித்தால், வருமான வரித் துறை அல்லது இதர புலனாய்வு அமைப்புகளால் தொழிலை இழக்கும் சூழல் மட்டுமல்லாமல் சிறை செல்லும் அபாயமும் உள்ளது. அவர்களிடம் போதுமான நிதி இல்லை. உடன் இருக்கும் கட்சியினர் மிரட்டப்பட்டு பிஜேபி உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு செல்கிறார்கள். கட்சியின் மூத்த தலைவர்களே, வெற்று சாக்கு போக்குகளை சொல்லி ஒன்று தலைமைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள்; அல்லது கலகத்தை விளைவிக்கிறார்கள். தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, காவல் துறை, மத்திய உளவுத் துறை, உள்ளிட்ட நாட்டின் அனைத்து அமைப்புகளும் காங்கிரஸ் கட்சியை அழிப்பதை ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன. மிகவும் வெளிப்படையாகவே, ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவே’ எங்கள் இலக்கு என்று, பிஜேபி தலைவர்கள் சூளுரைக்கிறார்கள். பிரதமரே இதை வலியுறுத்துகிறார்.
ராகுல் காந்தி என்ன செய்யலாம் ? அமைதியாக இருந்து, கட்சியும், நாடும் எப்படி நாசமாகப் போனால் என்ன, நாம் இருக்கும் சொத்தினை வைத்து சந்தோசமாக இருப்போம். வாழ்க்கையை இன்பமாக அனுபவிப்போம் என்று அனுபவிக்கலாம். கவலையின்றி வாழலாம். வாழ்வின் சுகங்கள் அனைத்தையும் அனுபவிக்கலாம். வெளிநாடுகளில் பொழுதை கழிக்கலாம்.
ஆனால் ராகுல் என்ன செய்கிறார் ? தோல்வியா ? அது என் அகராதியில் கிடையாது என்கிறார். துரோகிகளைப் பற்றி கவலையில்லை என்கிறார். இது என் நாடு. இது என் சமூகம். இவர்கள் என் மக்கள். இவர்கள் என்னை புறக்கணித்தாலும், உதாசீனப்படுத்தினாலும், அவர்களுக்காக நான் உழைப்பேன் என்கிறார். பார்வையில் தெளிவு கொண்டுள்ளார். இந்தியாவின் பிரச்சினை பிஜேபி அல்ல. மோடி அல்ல. மோடி ஒரு முகமூடியே. இந்தியாவின் உண்மையான பிரச்சினை ஆர்.எஸ்.எஸ் என்கிறார். ஆர்.எஸ்.எஸ் வெறுப்பை போதிக்கிறது என்கிறார். ஆனால் இந்தியா அன்பால் நிறைந்த நாடு. அனைவரையும் நேசிக்கும் நாடு; பன்முகத்தன்மை கொண்ட நாடு; இந்தியாவின் அழகு அதன் வேற்றுமையில்; அதன் பரந்த பன்முக பண்பாடும் செழுமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார்.
என் கையில் ஆயுதம் இல்லைதான். பரவாயில்லை. என்னைச் சுற்றி பெரும்பாலும் சந்தர்ப்பவாதிகளும் துரோகிகளும்தான். பரவாயில்லை. என்னிடம் அரசியல் செய்ய அடிப்படைத் தேவையான பணம் இல்லை. பரவாயில்லை. என்னோடு பயணிக்க ஒருவரும் இல்லை. நான் தனியாக இருக்கிறேன் அதுவும் பரவாயில்லை என கிளம்பியிருக்கிறார்.
2019 தேர்தல் தோல்விக்கு பிறகு, ராகுல் எழுதிய ராஜினாமா கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“எனக்கு பிஜேபி மீது எந்த வெறுப்பும் இல்லை. ஆனால், அவர்கள் வைத்திருக்கும் இந்தியா என்ற சித்திரத்தை எதிர்க்கிறேன். என் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் அவர்களின் இந்தியா என்ற சித்திரத்தை எதிர்க்க வேண்டும் என்று கூறுகிறது. ஏன் இந்த எதிர்ப்பென்றால், நான் உணரும், நான் உள்வாங்கிய இந்தியாவுக்கும், அவர்களின் இந்தியாவுக்கும் பெறும் வேறுபாடுகள் இருக்கின்றன. இது ஒன்றும் புதிய போர் அல்ல. இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடக்கும் போர். அவர்கள் வேறுபாடுகளை காண்கையில் நான் ஒற்றுமையை காண்கிறேன். அவர்கள் வெறுப்பை காண்கையில், நான் அன்பைக் காண்கிறேன். அவர்கள் அஞ்சுவதை, நான் அரவணைக்கிறேன்” என்றார்.
இந்தத் தேசத்தினைப் பற்றிய இத்தகைய புரிதல் உள்ள ஒரு மனிதன் தான் இன்றைய இந்தியாவின் தேவை. சமுதாயம் மாறியுள்ளது. மக்களின் பார்வையும், அணுகுமுறையும் சிந்தனையும் கூட மாறியுள்ளது. இந்த மாற்றத்தை புரிந்து கொண்டால்தான் இன்றைய சிக்கலை எதிர்கொள்ளவே முடியும். இந்த மாற்றத்தை உணராவிட்டால், எது சிக்கல் என்பதே புரியாமல் போய் விடும். இன்றைய சூழலை புரிந்தவர்களுக்கு, பிஜேபி மீண்டும் மீண்டும் வெல்வதோ, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மண்ணைக் கவ்வுவதோ வியப்பை அளிக்காது.
இன்று நடப்பது வெறும் தேர்தல் போட்டியல்ல. தேர்தல் யுத்தமல்ல. இது ஒரு தத்துவார்த்த போர். பார்ப்பனீயத்துக்கும், பவுத்தத்துக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பாக நடந்ததல்லவா போர். அது போன்ற ஒரு கால கட்டத்தில்தான் நாம் வாழ்கிறோம். இதுதான் நாம் இன்று வாழும் சூழல்.
இன்று எது பெரிய சிக்கல். எது பெரும் பிரச்சினை. எது உடனடியாக கவனிக்க வேண்டியது என்றால், சிறுபான்மை மக்களின் மனதில் இருக்கும் அச்சத்தை போக்குவது. அவர்களுக்காக குரல் கொடுக்க இந்தியாவே இருக்கிறது என்பதை உணர வைக்க. இந்தியர்கள் அனைவருமே சனாதனிகளோ, மதவாதிகளோ, பாசிச சக்திகளோ இல்லை என்பதை உணர வைப்பதே இன்றைய பிரதான தேவை.
ஒரு மனிதன், பிறப்பால் இஸ்லாமியனாக பிறக்கிறான். அது அவன் குற்றம் அல்ல. இஸ்லாமிய சூழலில் வளர்கிறான். அதன் பண்பாடுகளை பின்பற்றுகிறான். இஸ்லாமியனாக வாழ்கிறான். இந்த ஒரே காரணத்துக்காக, இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் அனைவரும் ஒரு புறம் சேர்ந்து கொண்டு, அவனை “நாங்கள் சொல்லும் உணவை உண்; சொல்லும்போது கடவுளை வணங்கு; நாங்கள் சொல்லும் கடவுளை வணங்கு; நாங்கள் சொல்வது போல திருமணம் செய், விவாகரத்து செய்; நாங்கள் சொல்லும் உடையை உடுத்து; எங்களுக்கு அடங்கி நட; எங்களுக்கும் இருக்கும் உரிமைகள் உனக்கு இல்லை; நீ இரண்டாந்தர குடிமகன் என்பதை அவனுக்கு வன்முறையை காட்டி அச்சுறுத்தி வைத்திருந்தால், அவன் எத்தகைய மனநிலையில் வாழ்வான் என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா ? அவர்களின் சூழல் குறித்து சிந்தித்திருக்கிறீர்களா ? நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதை யோசித்திருக்கிறீர்களா ?
இதைப்பற்றி சிந்திப்பதும், செயல்படுவதுமே எனது வாழ்வின் லட்சியம் என்று ஒருவன் நினைக்கிறான். ஏளனங்களும், ஏச்சுக்களும் அவனை பாதிப்பதில்லை. அவன் மீது வீசப்படும் இகழ்சொற்களை அவன் உதறித் தள்ளுகிறான். நகைக்கிறான். தன் பணியில் முழு மூச்சோடும், அர்ப்பணிப்போடும் செயல்படுகிறான்.
அப்படி அவனின் செயல்பாடுகளில் ஒன்றுதான் “பாரத்ஜோடோ யாத்திரை”. இந்த யாத்திரையின் நோக்கத்தை காங்கிரஸ் கட்சியே முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கத் தவறியதாகவே பார்க்க வேண்டி உள்ளது. இந்த யாத்திரையின் நோக்கம் தேர்தல் வெற்றி அல்ல. இந்த யாத்திரையால் உடனடி விளைவுகளை பார்க்க முடியாது. இந்த யாத்திரை ஏற்படும் தாக்கம் நாளை தெரியாது. அது தெரிவதற்கு சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அது நிச்சயம் பெரிய ஒரு அடித்தளத்தை அமைத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
நமக்கு வேண்டியது பூரண சுதந்திரமே; பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் சுதந்திரம் அல்ல என்பதை காங்கிரஸ் உணரவே பல ஆண்டுகள் ஆயின. 31 டிசம்பர் 1929ல்தான் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ‘பூரண சுதந்திரம்’ என்ற முடிவே எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 26 ஜனவரி 1930ல் பூரண சுதந்திரக் கோரிக்கை பிரகடனப்படுத்தப்பட்டு, ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
முதல் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தும் பொறுப்பு காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல் இயக்கத்தை எந்த வடிவத்தில் நடத்துவது என்று யோசித்து, காந்தி கண்டுபிடித்த அற்புதமான போராட்ட வடிவம் தான் உப்பு சத்தியாகிரகம்.
உப்பு காய்ச்சுவது, உப்புக்கு வரி கொடாமை என்ற யோசனையை காந்தி சொன்னபோது, அவர் சகாக்களே அதை ஒப்புக் கொள்ளவில்லை. சர்தார் வல்லபாய் படேல், நிலத்துக்கு வரி கொடுக்காமல் தவிர்ப்போம். வைசிராய் இர்வினோ, ‘இது ஒரு போராட்டமா ? கண்டுகொள்ளாமல் விடுங்கள்’ என்றார். ‘இந்த போராட்டம் எனது உறக்கத்தை கெடுக்கும் போராட்டம் அல்ல’ என்றார். காந்தியின் யோசனைக்கு, ராஜாஜி போன்ற சிலர் மட்டுமே ஆதரவு.
Gandhi in Dhandi March
மிகவும் சாமர்த்தியமான அரசியல்வாதியான காந்தி, காங்கிரஸ் தலைவர்கள் அத்தனை பேரையும் தனது யோசனையை ஒப்புக்கொள்ள வைத்தார். அப்படி 12 மார்ச் 1930ல் தொடங்கப்பட்டதுதான் உப்பு சத்தியாகிரகமும், தண்டி யாத்திரையும்.
அதற்கான பலன் எப்போது கிடைத்தது ? 17 ஆண்டுகள் கழித்து 1947ல்தான் கிடைத்தது. ஆனால் 1947ல் கிடைத்த அந்த பலனுக்கான அடித்தளத்தை அமைத்தது, 1930ல் நடந்த தண்டி யாத்திரையா இல்லையா ?
அது போன்றதுதான் ‘பாரத் ஜோடோ’ யாத்திரை. ராகுல் காந்தி அலுவலகத்தை சேர்ந்த ஒருவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள், இந்த யாத்திரையின் themeஐ மாற்ற வேண்டும் என்றும், இதன் பலன் தேர்தலில் பிரதிபலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியபோது, ராகுல் உறுதியாக, இந்த யாத்திரையின் நோக்கம் வேறு என்று கூறியதாக தெரிவிக்கிறார்.
இந்த யாத்திரையை அவர் இந்தியா குறித்த புரிதலுக்காக தொடங்கியிருக்கிறார். இந்தியா என்கிற தேசத்தினின் புத்தகத்திலும், தன்னைச் சுற்றியுள்ளவர்களிடத்திலும், தேர்தல் நேரத்தில் மக்களை சந்திப்பதிலும் தெரிந்து கொள்ள முடியாது என்று அவர் முடிவு செய்திருக்க வேண்டும். அவர் மக்களோடு உரையாட விரும்பினார் அந்த உரையாடலில் அவர் அதிகமும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டார். தேவைப்படும் நேரங்களில் பதில்களைச் சொன்னார். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், சிறுதொழில் செய்பவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள், எழுத்தாளர்கள், தன்னார்வலர்கள் என ஒவ்வொரு நாளும் அவர் சந்தித்த மனிதர்களும், உரையாடல்களையும் அவர் இந்தத் தேச நலனுக்கான முதலீடாக எடுத்துக் கொள்வார் என நம்புகிறேன். இன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் சிக்கல்கள் குறித்தும் இந்தத் தேசத்தின் மனநிலை பற்றியும் தெளிவாகத் தெரிந்த ஒரே நபர் என ராகுல் காந்தியை சொல்லலாம். இதனை மிகைப்படுத்தலுக்காக சொல்லவில்லை. அவர் தான் இதுநாள் வரை புரிந்து கொண்டதை ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன் பகிர்ந்து கொண்ட உரையாடல்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும். அந்த உரையாடலில் சிறு சிறு கேள்விகளையும் சந்தேகங்களையும், தான் சந்தித்த அனுபவங்களையும் ரகுராமிடம் முன்வைக்கிறார். மிக நல்ல உரையாடல் அது. அதில் ஒரு கேள்வியினை ராகுல் கேட்கிறார். “இந்தியா பசுமைப் புரட்சி, வெள்ளைப் புரட்சி. என பல புரட்சிகளைக் கண்டுள்ளது. இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான புரட்சி என்றால் எதை சொல்வீர்கள்?” என்று கேட்கிறார். அதற்கு ரகுராம் இப்படி சொல்கிறார், “இன்று நாம் செய்து கொண்டிருப்பது சேவைப் புரட்சி. அமெரிக்காவில் உள்ள வேலைகளை நாம் இந்தியாவில் இருந்து செய்து கொண்டிருக்கிறோம். இது எத்தனை பெரிய புரட்சி!!” என்கிறார்.
இதற்கு ராகுல் அளித்த மறுமொழி குறிப்பிடத்தக்கது. “இதற்கு ஆங்கில மொழியறிவு அவசியம் இல்லையா? இங்கு எல்லாருக்கும் ஆங்கிலம் தெரிவதில்லையே. மீண்டும் தெரிந்தவர்கள் மட்டுமே முன்னேற முடியும் என்கிற நிலை வருகிறது இல்லையா?” என்கிறார். தன்னுடேன் பேசிய மாணவர்களிடம் “நீங்கள் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள்?” என்று கேட்டதாகவும் அதற்கு அவர்கள் மருத்துவம், பொறியியல், இராணுவம் என இவற்றை மட்டுமே சொன்னதாகவும் சொல்றார். வெவ்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் இருப்பதை நாம் ஏன் மாணவர்களுக்கு சொல்லவில்லை என்கிறபோது ரகுராம், கல்விக்கு இன்னும் நாம் முதலீடு செய்ய வேண்டும் என்கிறார். அதை ஆமோதிக்கிறார் ராகுல். எதற்காக உரையாடலின் இந்தப் பகுதியை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், ஒருவர் அடுத்த தலைமுறையின் அடிப்படைப் பிரச்சனை குறித்து புரிந்து கொண்டிருக்கிறார் என்பதே மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறது. இதனை மேடையில் ஏறி தேர்தல் நேர வாக்குறுதியாகக் கூட தலைவர்கள் பேசுவதில்லையே. அப்படியிருக்க ஒருவர் தனது யாத்திரைகளின் மூலம் தேசத்தின் மனநிலையை, குறைபாடுகளை, களைய வேண்டிய வழிமுறைகளை தெரிந்து கொள்கிறார் என்பது எத்தனை நம்பிக்கையைத் தருகிறது இல்லையா!!
100 நாட்களை கடந்து இந்த யாத்திரை இன்று ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே நான் உணர்கிறேன். தொடக்கத்தில் இந்த பாரத் ஜோடோ யாத்திரையை பெரிதும் கண்டுகொள்ளாமல் இருந்த பிஜேபி, தினந்தோறும் அதில் சர்ச்சையை உருவாக்க முயல்வதும், பாரத் ஜோடோ யாத்திரை பற்றி, ஊடகங்களில் செய்தி வராமல் இருக்க மெனக்கிடுவதுமே, இதன் தாக்கத்தை நமக்கு உணர்த்துகிறது.
இந்த யாத்திரையால் ராகுலின் நம்பிக்கை பல மடங்கு உயர்ந்திருப்பதாக ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
“காங்கிரஸின் கதை முடிந்து விட்டது என்று சிலர் கனவு காண்கிறார்கள். காங்கிரஸ், பிஜேபியை வீழ்த்தத்தான் போகிறது. அது நடக்கத்தான் போகிறது” என்று ராகுல் பேசியதில் அந்த நம்பிக்கை வெளிப்படுவதை உணர முடியாதவர்கள், வரலாறும் அறியாதவர்கள், மக்களையும் அறியாதவர்கள்.
ராகுல் காந்தியிடம் வெளிப்படும் இந்த நம்பிக்கை, நம் அனைவரிடமும் வர வேண்டும். உலகில் வீழ்த்த முடியாத சக்தி எதுவுமே இல்லை என்கிறபோது, பிஜேபி / ஆர்.எஸ்.எஸ் மட்டும் விதிவிலக்கா என்ன ?
இது நமது நாடு. இங்கே பாசிஸ்டுகளுக்கு இடமில்லை.
பாசிச சக்திகளை வீழ்த்துவோம். இந்தியாவை மீட்டெடுப்போம்.
Thank to சவுக்கு….