சசிகலாவுக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் முழுமையாக குறைந்துவிட்டது என்று மருத்துவமனை அறிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தண்டனை காலம் முடிந்து இம்மாதம் 27-ம் தேதி விடுதலையாக உள்ளார். கடந்த ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்த நிலையில் அவருக்கு புதன்கிழமை மாலை 3 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஏற்கனவே சர்க்கரை, தைராய்டு பிரச்னைகளால் அவதிப்பட்ட சசிகலாவுக்கு ஆக்ஸிஜன் அளவு இயல்பைவிட குறைவானதால், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் இரவு 7 மணியளவில் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக ஆன்டிஜென் எனப்படும் விரைவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சசிகலாவுக்கு தொற்று இல்லை என தெரியவந்தது. அதன்பிறகு ஆர்.டி பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டது. சசிகலாவுக்கு சுவாச கருவி பொறுத்தி சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், திடீரென நள்ளிரவில் அவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆர்.டி. பி.சி.ஆர் சோதனையில் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதனையடுத்து, சசிகலா, விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அதில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது.
சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘கொரோனா-வுக்கான அறிகுறிகள் முழுமையாக குறைந்துவிட்டது. சர்க்கரை நோய்க்கான இன்சுலின் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது. மாஸ்க் மூலம் இன்று காலை வரை 3 லிட்டர் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுவந்த நிலையில் அது தற்போது 2 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. உடல்நிலையில் தொடர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான உணவு உட்கொள்கிறார். துணையுடன் நடக்கிறார். இருதய செயல்பாடுகள் இரத்த அழுத்தம் சீராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to : news 18