தமிழகத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும் ஒரு லட்சத்து 48,000 பேருக்கு நேற்று, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடும் பணிகள், கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், நாடு முழுவதும் நேற்று மட்டும் 1.48 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவித்தனர். தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவரின் மரணத்துக்கு தடுப்பூசி காரணமில்லை என்றும், பிரேத பரிசோதனை அறிக்கையில் அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
கர்நாடகாவைச் சேர்ந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை 580 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தமிழகத்தில் நேற்று 3-வது நாளாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. ஒரே நாளில் 16000 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்ட நிலையில், 10,256 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல் மாவட்ட ஆட்சியராக, திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன், மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் விதிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை யாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
Thanks to : news 18