விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்தியில் அமீர் கான் உடன் லால் சிங் சத்தா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்த விஜய் சேதுபதி கால்சீட் பிரச்னை காரணமாக அந்தப் படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியாகி ஹிட் அடித்த ‘மாநகரம்’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கை சந்தோஷ் சிவன் இயக்க இருக்கும் நிலையில் அத்திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் விஜய் சேதுபதி.
அதைத்தொடர்ந்து அந்தாதுன் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் மேலும் ஒரு பாலிவுட் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக காத்ரீனா கைஃப் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கசிந்துள்ள நிலையில் விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது.
விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் நிலையில், கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Thanks to : news 18