கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதால் பள்ளிகளுக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதாவது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வித்யகாமா திட்டத்தின் கீழ் தொடர்ச்சியான கற்றலை உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
ஒன்பது மாதங்களுக்கு பிறகு அரசுப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம். இந்த சூழலில் பெங்களூருவில் சுமார் 5,000 ஆசிரியர்கள் கொரோனா தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்களது பணிகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்பட வில்லை. இதனால் நாளை (ஜனவரி 1) முதல் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வர முடியாத சூழல் எழுந்துள்ளது.
கடந்த டிசம்பர் 15ஆம் தேதி கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் வெளியிட்ட உத்தரவில், அனைத்து அரசு ஊழியர்களும் வாரத்தில் மூன்று நாட்கள் கொரோனா பணிகளிலும், மூன்று நாட்கள் தங்களது துறை சார்ந்த பணிகளிலும் ஈடுபடலாம். அதுவும் திங்கள் முதல் புதன் வரை தங்கள் துறை சார்ந்த பணிகளுக்குச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பெங்களூரு மாநகராட்சி ஆணையருக்கு பொது வழிகாட்டுதல் பிரிவு ஆணையர் வி.அன்பு குமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கொரோனா பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் என்று நம்புகிறோம். அதுவும் இன்றைய தினம் (டிசம்பர் 31) முடிவதற்குள் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறோம்
இதுபற்றி தொடர்ச்சியாக அறிவுறுத்தப்படும். மாநிலத்தின் பிற பகுதிகளில் இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை. பெங்களூருவில் தான் ஆசிரியர்களுக்கு இப்படியொரு சிக்கல் நீடிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மாநகராட்சி ஆணையர், இன்றைய தினம் கொரோனா பணிகள் தொடர்பான தெளிவான முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய கிழக்கு பெங்களூருவைச் சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் முழு பலத்துடன் வருகை புரியவில்லை எனில், மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்படுவர். படிப்படியாக வித்யகாமா வகுப்புகளுக்கு மாற்றப்பட்டு பாடம் நடத்தப்படும். எங்கள் பள்ளியில் 10ஆம் வகுப்பிற்கு 7 ஆசிரியர்கள் இருப்பர்.
இது கல்வி பெறும் உரிமையை குலைக்கும் செயல். கோவிட்-19 அவசரகால நிலையில் பொதுமக்கள் இருப்பது உண்மை தான். அதற்காக ஆசிரியர்களை பயன்படுத்துவது சரியாக இருக்காது. இதற்கு மாநில அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். உடனே கொரோனா பணிகளில் இருக்கும் ஆசிரியர்களை விடுவித்து மாணவர்களின் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Thanks to : samaiyam