புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறப்பு இல்லை என முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 4-ம் கட்ட ஊரடங்கு மே. 31- வரை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாடு பகுதிகளில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பாக ஆலோசிப்பதற்காக புதுச்சேரியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாளை முதல் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகளை திறந்து மது விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று இரவு திடீரென வெளியிட்ட அறிவிப்பில் நாளை மதுக்கடைகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி கூறியது, மது விற்பனைக்கு வரி விதிக்க முடிவு செய்து அதற்கான கோப்பு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஒப்புதல் கிடைத்தவுடன் மதுக்கடைகள் திறக்கப்படும். அதுவரை நாளை மதுக்கடைகள் திறப்பு இல்லை. எனினும் மதுக்கடைகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Thanks to Dinamalar