கட்சிக்கு, ஒரு தலைமை; ஆட்சிக்கு, ஒரு தலைமை என்ற திட்டத்தை, நடிகர் ரஜினி அறிவித்திருப்பது, பால் தாக்கரே பாணி அரசியல் என, அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா கட்சி நிறுவனர், பால் தாக்கரே, கட்சிக்கு, ஒரு தலைமை; ஆட்சிக்கு, ஒரு தலைமை என்ற, கொள்கையை கடைபிடித்தார்.
மஹாராஷ்டிரா முதல்வராக, மனோகர் ஜோஷி, நாராயண் ரானே போன்றவர்களை, பால் தாக்கரே உருவாக்கினார். எனவே, அவரது பாணியில், முதல்வரை உருவாக்கும், ‘கிங் மேக்கர்’ போல் இருக்க, ரஜினி விரும்புகிறார் என, அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.
ஸ்டாலினை குறிவைக்கும் ரஜினி!
ரஜினி கூறுகையில், ”நாம், இரண்டு பெரும் அரசியல் ஜாம்பவான்களை எதிர்கொள்ள போகிறோம். இது, சாதாரண விஷயமல்ல. பத்து ஆண்டுகளாக, ஆட்சியில் இல்லை என்றாலும், அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில், ஒரு தரப்பும்; ஆட்சியில் இருந்தபடியே, குபேரனின் கஜானாவையே கையில் வைத்து கொண்டு, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில், மற்றொரு தரப்பும் காத்திருக்கின்றன,” என்றார். ஸ்டாலினையும், இ.பி.எஸ்.,சையும், அவர் போட்டியாளர்களாக கருதுவது, இதில் இருந்து தெரிய வருகிறது.
ரஜினி சொல்வது, நிஜத்தில் நடக்காது;
‘டுவிட்டர்’ பக்கத்தில், நடிகர், எஸ்.வி.சேகர் கூறியிருப்பதாவது: ‘முதல்வர் பதவி குறித்து, நான் நினைத்து பார்த்தது இல்லை. சட்டசபையில் உட்கார்ந்து பேசும் எண்ணம், எனக்கு ஒருபோதும் கிடையாது; அது எனக்கு, ‘செட்’ ஆகாது’ என, ரஜினி கூறியிருக்கிறார். அவர் கூறுவதை பார்த்தால், பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தியை முதல்வராக்கி, அழகு பார்க்க நினைக்கிறாரா என தெரியவில்லை. கட்சியை நடத்த பணமும், ஆட்சியை நடத்த ராஜதந்திரமும் தேவை.எனவே, ரஜினி சொல்வது, நிஜத்தில் நடக்காது; இந்தியாவில் புரட்சியும் வெடிக்காது. ரஜினி சொல்வதெல்லாம் புஸ்வாணமாகி விடும். கட்சி, ஆட்சி இருவர் கையில் இருந்தால், முதலில் கட்சி, சின்னம் முடங்கும்; இதுவே வரலாறு. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.