அட்லியின் முதல் படத்திலும், கடைசிப் படமான பிகிலிலும் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார்.
அட்லி அடுத்து ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்தை இயக்குகிறார். இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக வெளிவந்த செய்தியைத் தொடர்ந்து நயன்தாரா ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனரானார். அடுத்து விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கியவர் தொடர்ந்து மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து ஹாட்ரிக் அடித்தார். அடுத்து அவர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்குகிறார். அட்லி சொன்ன கதை பிடித்துப் போய், ஷாருக்கான் நடிக்க ஒப்புக் கொள்ள, படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க அட்லி நயன்தாராவுடன் பேசியுள்ளார். அட்லியின் முதல் படத்திலும், கடைசிப் படமான பிகிலிலும் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக இருந்தும் நயன்தாரா இதுவரை இந்தியில் நடித்ததில்லை. இந்தியாவில் நடிகையாகும் யாருக்கும் இந்தி சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும். அசின், காஜல் அகர்வால், தமன்னா, தாப்ஸி என தென்னிந்திய மொழிகளில் அறிமுகமாகி பிரபலமான பலரும் இந்திப் படத்தில் நடித்திருக்கிறார்கள். த்ரிஷா கூட அக்ஷய் குமாருடன் ‘கட்டா மித்தா’ படத்தில் நடித்தார். ஆனால், இந்திப் படத்தில் நடிக்க நயன்தாரா எப்போதுமே ஆர்வம் காட்டியதில்லை. இந்தமுறை அட்லியின் ஆஃபரை அவர் ஒத்துக் கொள்வாரா என்பதும் தெரியவில்லை.
நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. ரஜினியுடன் அவர் நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ தீபாவளிக்கு வெளிவருகிறது. இது தவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் அவர் நடித்து வருகிறார்.
ஷாருக்கான் படத்தில் நடிக்க அட்லி நயன்தாராவிடம் பேசியுள்ளார் என்ற செய்தி வெளியானதும், நயன்தாரா ஹேஷ் டேகை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Thanks to : news 18
