தமிழ் நாட்டில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து, பொதுப் போக்குவரத்துக்கும், ஜவுளி மற்றும் நகைக்கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட முழுஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதில், கொரோனா பரவல் அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் குறைந்த அளவிலான தளர்வுகளும், மற்ற 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள், வரும் திங்கட்கிழமை அதிகாலை 6 மணியுடன் முடிவடைகிறது.
பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதேநேரம், கோவை, ஈரோடு மாவட்டங்களில் பரவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர், அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
இதில், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சிறிய அளவிலான ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதேபோல, சிறிய வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடுகள் மாலை 5 மணி வரை உள்ள நிலையில், மேலும் சில மணிநேரங்களுக்கு திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Thanks to : news 18
