திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி பூஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது செல்போனுக்கு வேடசந்தூர் போலீஸ் சார்பில் இ-செலான் குறுஞ்செய்தி வந்தது. அதில் வேடசந்தூர் பகுதியில் தியாகராஜன் பைக்கில் சென்றதாகவும், அப்போது சீட்பெல்ட் அணியவில்லை என்றும் எனவே ரூ.100 அபராதம் கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தியாகராஜன் பைக்கில் சென்ற தனக்கு சீட் பெல்ட் அணியவில்லை என குறிப்பிட்டிருப்பது எதனால் என போலீசாரிடம் கேட்டார். அதற்கு அவர்கள் தெரியாமல் குறுஞ்செய்தி வந்துள்ளது என கூறி உள்ளனர். பொதுவாக காரில் செல்பவர்கள் கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
பைக்கில் செல்பவர்கள் ஹெல்மட் அணியாவிட்டால் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். எனவே தியாகராஜன் செல்போனுக்கு போலீசார் குறுஞ்செய்தியை மாற்றி அனுப்பி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே இதுபோன்ற குளறுபடிகள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.