தூத்துக்குடியில் வியாபாரிகள் இருவரை போலீசார் தாக்கியதால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவத்தின் பகீர் பின்னணி அம்பலமாகியுள்ளது. லாக்கப் லத்தி அட்டாக் குறித்து முன்னாள் ரவுடிகள் அதிரவைக்கும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தில், சாதாரண வழக்கில், ஈகோவை தலையில் ஏற்றிக்கொண்ட போலீசார், சாமானியர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான தந்தை ஜெயராஜூம், மகன் பென்னிக்ஸும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். தாக்கப்பட்டதால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சத்தான்குளம் காவல்நிலையத்தில் இருவரும் தாக்கப்பட்டபோது உடனிருந்த பாஜக பிரமுகர் முத்துராமலிங்கம் சொல்லும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தாக்குதல் நள்ளிரவு 12 மணிவரைக்கும் நீடித்ததாக கூறுகிறார் ஜெயராஜின் உறவினர். இருவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டதைக் கண்ட உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துப் போவதாக போலீசாரிடம் மன்றாடியதாதவும், ஆனால், போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் கூறுகிறார் ஜெயராஜின் இன்னோர் உறவினர்.
இருவரையும் பரிசோதித்த மருத்துவரோ, நீதிபதியோ நேரடியாக பார்த்திருந்தால் அவர்கள் உயிர்பிழைத்திருக்க கூடுமென்பது உறவினர்களின் கருத்து. விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட பலர் தாங்கள் போலீசாரால் தாக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். கோவில்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், வழக்கொன்றில் கைது செய்யப்பட்டபோது, போலீசாரால், தான் தாக்கப்பட்டதை நீதிபதியிடம் சொல்லியதாக கூறுகிறார்.
ஒரு காலத்தில் ரவுடியாக வலம்வந்த சிலரிடம் பேசியபோது, லாக்கப்.. லத்தி.. அட்டாக்.. என தங்களுக்கு நேர்ந்த துன்பங்களை விரிவாக விளக்கினர்.விசாரணையின் போது தாக்குதல் நடத்த போலீசாருக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்ற கேள்வியைத்தான் எல்லோரும் தற்போது எழுப்புகிறார்கள். விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் குற்றம் செய்தவர்களாகவே இருந்தாலும், அவர்களை தண்டிப்பது காவல்துறையின் வேலை இல்லை.. நீதிவாங்கித் தரும் அமைப்பு.. அநீதியிழைப்பது சரியா? என்று கேள்விகள் எழுந்துள்ளது.
Thanks To: News 18