சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டதை தொடர்ந்து சென்னையில் காய்கறிகளின் வரத்து மிக மிக குறைந்ததால், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை கடந்த 5ம் தேதி முதல் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னைக்கு வரக்கூடிய காய்கறிகளின் வரத்து முற்றிலுமாக நின்று உள்ளதால் ஏற்கனவே கையிருப்பில் உள்ள காய்கறிகளை மட்டுமே வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
காய்கறிகளின் வரத்து நின்றுவிட்டதாலும், கையிருப்பு காய்கறிகள் குறைவாக இருப்பதாலும் ஆங்காங்கே இருக்கக்கூடிய கடைகளில் வியாபாரிகள் நேரத்திற்கு தகுந்தாற் போல காய்கறிகளின் விலையை கடுமையாக உயர்த்தி விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கும் வெங்காயம் 30 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் கிலோ 80 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கும் உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கும் கேரட் 50 ரூபாய்க்கும் பீன்ஸ் 45 முதல் 50 ரூபாய்க்கும் பீட்ரூட் 50 ரூபாய்க்கும் முள்ளங்கி 50 ரூபாய்க்கும் வெண்டைக்காய் 80 ரூபாய்க்கும் கத்தரிக்காய் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பச்சை மிளகாயின் இருப்பு மற்றும் வரத்து மிகமிக குறைந்ததால் பெரும்பாலான கடைகளில் பச்சைமிளகாய் கிடைப்பதில்லை எனவும் பச்சை மிளகாய் கிலோ 80 முதல் 90 ரூபாய்க்கும் இஞ்சி 100 முதல் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நன்றி :நியூஸ் 18