மதுரை மாநகராட்சியில் அத்யாவசிய பொருட்கள் வாங்க வாகனங்களில் வெளியே செல்லும் நபர்களுக்கு மூன்று நிறங்களில் அனுமதி அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பால், பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், அத்யாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மதுரை மாநகராட்சியில் அத்யாவசிய பொருட்கள் வாங்க செல்வோருக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதி கொடுக்கப்படும் எனவும், அவர்களுக்கு மூன்று நிறங்களில் அனுமதி அட்டை வழங்கப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மதுரை மாநகராட்சி பகுதிகளில் அத்யாவசிய பொருட்கள் வாங்க வாகனங்களில் வெளியே செல்பவர்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு மற்றும் நீலம் ஆகிய 3 நிறங்களில் அனுமதி அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. மஞ்சள் நிற அட்டை பெறுகிறவர்கள் திங்கள், வியாழன் கிழமைகளிலும், ஆரஞ்சு நிற அட்டை பெறுகிறவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், நீல நிற அட்டை பெறுகிறவர்கள் புதன், சனிக்கிழமைகளிலும் என வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த அனுமதி அட்டை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செல்லத்தக்கது. மருத்துவ அவசரத்திற்கு இந்த நடைமுறையில் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், 18 வயது முதல் 60 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே இந்த அட்டையை பயன்படுத்த வெளியே வர முடியும். அவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி:Dinamalar