அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை,
உலகையே முடக்கி உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கொடூர கரங்களை பரப்பி வருகிறது. மராட்டியம், டெல்லி, கர்நாடகா, உத்தரபிரதேசம் என பல மாநிலங்களில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது.

இந்தியாவில் நேற்று வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 151 ஆக இருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 166 ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது எனவும் முக கவசம், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.