Saturday , August 13 2022
Breaking News
Home / தமிழகம் / மு.க.ஸ்டாலின் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் குறைகளை கண்டுபிடிக்க முடியாது- முதல்வர் பதிலடி…
Vsolve UK

மு.க.ஸ்டாலின் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் குறைகளை கண்டுபிடிக்க முடியாது- முதல்வர் பதிலடி…

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நடந்தஅரசு மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் அண்ணா பிறந்தநாளையொட்டி 1985-ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் இருந்து பிரித்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. தீரம், தியாகம், வீரம் நிறைந்த மாவட்டம் திண்டுக்கல். குளிரால் வாடிய மயிலுக்கு போர்வை போர்த்திய பேகன் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று புறநானூறு கூறுகிறது.
சுதந்திர போராட்ட வீரர்கள் சுப்பிரமணிய சிவா, விருப்பாச்சி கோபால் நாயகர் உள்பட பல்வேறு தலைவர்களை தந்த மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம். மதுரை நாயக்கர் வம்சத்தில் முத்து கிருஷ்ணப்ப நாயக்கரால் திண்டுக்கல் கோட்டை பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டது. எதிரிகளை துணிச்சலுடன் எதிர்த்து போராடிய மன்னர்கள் இங்கு தங்கினர். மேலும் சிவகங்கை வீர பெண்மணி வேலுநாச்சியார் இங்கு தங்கி ஆங்கிலேயர்களுக்க எதிராக போராடியதாக வரலாறு உண்டு.
பல்வேறு மதத்தினர். இணக்கமாக மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பல விதமான பூட்டு என எம்.ஜி.ஆர். பாடியது, திண்டுக்கல் பூட்டை நினைவில் கொண்டுதானோ என எண்ணத் தோன்றும் வகையில் பூட்டு என்றால் திண்டுக்கல் என்ற நிலை உள்ளது. 350-க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில்கள் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், நூற்பாலைகள் உள்ளன. இதன் மூலம் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
இயற்கை சூழ்ந்து காணப்படும் இந்த மாவட்டத்தில் கொடைக்கானல் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த தலத்துக்கு கோடை காலத்தில் ஏராளமானோர் வருகின்றனர். மேலும் பள்ளி, கலை மற்றும் பொறியியல் கல்லூரி நிறைந்த மாவட்டம் திண்டுக்கல் ஆகும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழி காட்டுதலின்படி செயல்படும் அரசு ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி சாதனை படைத்துள்ளது. திண்டுக்கல் மருத்துவ கல்லூரி 2021-22-ம் கல்வி ஆண்டில் 150 மாணவர்களை சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.327 கோடி மதிப்பீட்டில் ஆயத்த பணிகள் தொடங்கி முதல்வர் மற்றும் சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு முதல் கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நோயற்ற வாழ்வே அனைத்து செல்வங்களையும் பெற்றுத் தரும். எனவே ஜெயலலிதா வழியில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் தாய் சேய் பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்தும், எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. இதற்காக மத்திய அரசிடம் இருந்து 5 முறை விருது பெற்றுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த நாராயண சாமி என்ற வாலிபர் 2 கைகளையும் இழந்து தனக்கு உதவ வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தார். அவருக்கு மாற்று கைகள் பொருத்த முடியுமா? என மருத்துவ துறையினரிடம் ஆலோசனை நடத்தினேன். மருத்துவ குழுவினர் உறுதியளித்ததின் பேரில் அவருக்கு 2 கைகளும் பொருத்தி சாதனை படைத்துள்ளனர். தற்போது அவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது. மருத்துவ துறையில் தமிழக அரசு பல்வேறு சாதனைகள் படைத்து வருதற்கு இதுவே சான்றாகும்.
தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டோம். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த நூற்றாண்டு விழாவில் பல அறிவிப்புகள் வெளியிட்டேன். அதன்படி திண்டுக்கல் கஸ்தூரிபா செவிலியர் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம், அம்மையநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் பரிசோதனை மையம், கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன், பழனி அரசு ஆஸ்பத்திரியில் நவீன மருத்துவ மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 59 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற திட்டங்களில் கூட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார். அ.தி.மு.க. அரசு மீது எப்படியாவது குற்றச்சாட்டு கூற வேண்டும் என்று தேடிப்பார்க்கிறார். பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் அ.தி.மு.க. அரசு மீது குறை காண முடியாது.
தமிழகம் முழுவதும் முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடத்தி ஏராளமான மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த முகாமில் 1612 முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேர்களுக்கு ஓய்வூதியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 2 லட்சம் பேர்களுக்கு அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முருகனின் 3-ம் படை வீடான பழனி, திருப்பதியைப் போல அனைத்து வசதிகளும் கொண்ட தலமாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசும்போது,  இந்தியாவிலேயே, ஒரே அரசாணையில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்த அரசு தமிழக அரசுதான் என்றார்.
Bala Trust

About Loganathan K

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES