பீஜிங்: சீனாவின் ஹூபே
மாகாணத்திலுள்ளவுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால் உலகளவில், 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 1.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இதன் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.
இந்நிலையில், சீனாவில் கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வருவதாக தகல்கள் வெளியாகின. இதை உறுதிப்படுத்தும் வகையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் வுஹான் நகரில் நேற்று (மார்ச் 10) நேரில் ஆய்வு செய்தார்.
அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் கொரோனா வைரசின் தாக்கம், கட்டுப்படுத்தும் முறை மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக புத்துணர்வாக பேசினார். சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடமும், நர்ஸ்களிடமும் உற்சாகமாக பேசினார். இது தொடர்பான வீடியோ வெளியானது.
வர்த்தகமும்… போக்குவரத்தும்!
இந்நிலையில் அதிபர் ஜி ஜின்பிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கொரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்த, ஹூபே மாகாணத்தில், கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. வைரஸ் பரவலின் தீவிரத்தை மருத்துவர்கள் குறைந்துள்ளனர். இதனால், அங்கு புதிதாக யாரும் வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகவில்லை. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், இது முதல்கட்ட வெற்றி. இன்னும் ஓரிரு வாரங்களில், ஹூபே மாகாணத்தில், வர்த்தகமும் போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும்,” என்றார்.
‘வுஹானில் வர்த்தகமும் போக்குவரத்தும் சீராகும் என, அதிபர் அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு’ என, வுஹான் நகரில் சிக்கியுள்ளவர்களைத் தொடர்புகொள்ள முடியாத பலரும், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், வுஹானில் இயல்பு நிலை திரும்ப பல மாதங்களாகலாம் என்றும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது