\
டெல்லியில் நிலவும் பதற்றம் அவசர கூட்டத்திற்கு துணை கவர்னர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அமித்ஷா அழைப்பு விடுத்து உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது.
வடகிழக்கு டெல்லியின் யாஃபிராபாத், மஜ்பூர் மற்றும் பஜான்புரா பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில், ஒரு தலைமைக்காவலர் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பதற்றத்தை தணிக்க போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை ஏழு ஆக உயர்ந்துள்ளது என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிலவும் நிலைமை குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியின் துணை கவர்னர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். கூட்டம் மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
டெல்லியில் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலையைப் குறித்து நான் கவலைப்படுகிறேன். நமது நகரத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஈடுபடுவோம். வன்முறையைத் தவிர்க்குமாறு அனைவரையும் நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளின் அனைத்து எம்.எல்.ஏக்களையும் , அனைத்து தரப்பினரையும், மூத்த அதிகாரிகளையும் சிறிது நேரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
இந்த கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.