நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை செயல்பாட்டிற்கான சிறப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் பேசியதாவது:ஐக்கிய நாடுகள் சபைக்கு நிலுவையின்றி சந்தா செலுத்தும் மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உள்நாட்டு சண்டை உள்ளிட்ட காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் ஐ.நா.அமைதிப் படை நிலைகொண்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள இந்திய ராணுவத்தின் சேவைக்காக வழங்க வேண்டிய தொகை சரிவர வழங்கப்படுவதில்லை.
கடந்த 2019 மார்ச் நிலவரப்படி இந்தியாவுக்கு ஐ.நா. 270 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலுவைதான் அதிகம். அதுபோல ஒரு நாட்டில் அமைதிப் படையினர் பணி முடிந்து திரும்பிய பின்பும் அதில் பங்கேற்ற நாடுகளுக்கான நிலுவை பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. அமைதிப் படை செயல்பாடுகளுக்காக திரட்டப்படும் நிதியை வேறு பணிகளுக்கு திருப்பி விடுவது தவறான கணக்கீட்டு நடைமுறையாகும்.
அத்துடன் இத்தகைய போக்கு ஐ.நா. மீதான நம்பிக்கை குறைய வழிவகுக்கும். அமைதிப் படையின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். அப்போதுதான் அப்படையின் குறைநிறைகளை அறிந்து தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் கூறினார்.