பானிபட் : புல்வாமா தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட கோரிய மனுவை, மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், கடந்த ஆண்டு பிப். 14ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 40 சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, ஹரியானா மாநிலம், பானிபட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் பி.பி.கபூர் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சி.ஆர்.பி.எப்., இயக்குனர் அலுவலகத்தில், கடந்த மாதம் மனு செய்தார்.
அதில், புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் பெயர் மற்றும் பதவி, அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட உதவி தொகை, இந்த தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை மற்றும் தாக்குதலில் தொடர்புடையதாக நிரூபிக்கப்பட்ட அதிகாரிகளின் விபரம் ஆகியவற்றை கேட்டார்.
அவர் கேட்ட விபரங்களை தர, சி.ஆர்.பி.எப்., டி.ஐ.ஜி.,யும், தகவல் அதிகாரியுமான ராகேஷ் சேத்தி மறுத்துவிட்டார். ‘சி.ஆர்.பி.எப்., அமைப்பில் இருந்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விவகாரங்களை மட்டுமே கேட்டுப் பெற முடியும். மற்ற விபரங்களை தர மறுப்பதற்கு, சட்டத்தில் இடம் உள்ளது’ என, விளக்கம் அளித்துள்ளார்.