இலங்கை ராணுவ தளபதி அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தற்போது இலங்கை ராணுவத் தளபதியாக இருக்கும் ஷாவேந்திர சில்வா மீது குற்றச்சாட்டப்பட்டது.
போர் நடந்த சமயத்தில், இலங்கை ராணுவத்தின் 58-வது பிரிவுக்கு தலைமை வகித்த சவேந்திர சில்வா, தமிழ் மக்களுக்கான மருத்துவ வசதியையும் மனிதாபிமான பொருள்களையும் நிறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர் மீது ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் உரிமை மீறல் குற்றச்சாட்டு 2013-ல் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இலங்கை ராணுவ தளபதியாக பதவி வகிக்கும் ஷாவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ வெளியிட்டுள்ள பதிவில், இலங்கை உள்நாட்டு போரின் போது, செய்த குற்றங்களுக்காக சில்வாவை அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா, தனது முடிவை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.