புதுடில்லி : டில்லியில் சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
டில்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்.8ல் தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை 11ம் தேதி துவங்கி அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த 2015 சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அதிரடியாக 67 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பா.ஜ. மூன்று இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இம்முறை பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் நோக்கில் பா.ஜ. தேர்தல் வியூகத்தை அமைத்து விறுவிறுப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
அமித் ஷா தலைமையில்…
ஆங்காங்கே ‘நாட்டை மாற்றிக் காட்டினோம்; இப்போது டில்லியை மாற்றுவோம்’ என்றும் ‘டில்லி மோடியுடன் கைகோர்த்துள்ளது’ எனவும் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் மோடிக்கு பதிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை பிரசாரகராக உருவெடுத்துள்ளார். பொதுக் கூட்டம் மற்றும் தெருமுனைக் கூட்டம் என 11 கூட்டங்களில் அவர் பங்கேற்றுள்ளார். அவருடன் டில்லி மாநில பா.ஜ. தலைவர் மனோஜ் திவாரியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அமித் ஷா தன் பேச்சில் குடியுரிமை திருத்த சட்டம் காஷ்மீரின் 370வது சட்டப் பிரிவு நீக்கம் முத்தலாக் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சீர்திருத்த திட்டங்களை விவரிக்கிறார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் காங். தலைவர் ராகுல் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அண்டை நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மை மக்களின் நலனை புறக்கணிப்பதாக அமித் ஷா குற்றம் சாட்டி வருகிறார்.
இத்தேர்தலில் பா.ஜ. 200 எம்.பி.க்களை களமிறக்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியும் மூன்று எம்.பி.க்களுக்கு பிரித்தளிக்கப்பட்டு பா.ஜ. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதி நிலவரப்படி பா.ஜ. 343 பொதுக் கூட்டங்களை நடத்தியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் பிரதமர் மோடி பா.ஜ. தலைவர் ஜே.பி.நட்டா மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் நிதின் கட்கரி உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். இதில் போஜ்புரி நடிகர்கள் ரவி கிஷன் தினேஷ் லால் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் வாயிலாக பூர்வாஞ்சல் வாக்காளர்களை கவர திட்டமிடப்பட்டுள்ளது
.
சளைக்காத ஆம் ஆத்மி:
பா.ஜ.வுக்கு சற்றும் சளைக்காமல் ஆளும் ஆத் ஆத்மி கட்சியும் அனல் தெறிக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சி ஐந்து ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்திய இலவச ‘வை பை’ மின்சாரம் குடிநீர் திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்கிறது. டில்லியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி நாட்டிலேயே சிறந்த பள்ளிகளாக உயர்த்திய பெருமையை ஆம் ஆத்மி பறைசாற்றுகிறது. அத்துடன் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதிவு செய்த பேச்சுக்கள் மூலம் டில்லி மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள வசதியாக பிரத்யேக வலைதளத்தையும் ஆம் ஆத்மி துவக்கியுள்ளது.