
மாமல்லபுரம்: தேசிய அளவில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்ந்து படிப்பது 27.1 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் இது 51.4 சதவீதமாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பையனூர் கிராமத்தில் அமைந்துள்ள சாய் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா பல்கலை. வேந்தர் கே.வி.ரமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மேலும், பல்கலைக்கழகத்தின் முதல் கட்டிடத்தை திறந்து வைத்து, இரண்டாவது கட்டிடத்துக்கான கல்வெட்டை திறந்துவைத்து, அடிக்கல் நாட்டினார்.
பின்னர், நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழக அரசு உயர் கல்வியில் முதலில் இருந்தே மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். இதன்மூலம், அனைவரும் எளிய முறையில் உயர்கல்வி பயின்றனர். இதனால், தேசிய அளவில் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்ந்து படிப்பது 27.1 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் இது 51.4 சதவீதமாக உள்ளது.
பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் காமராஜர், உயர் கல்விக்கு கருணாநிதி முக்கியத்துவம் கொடுத்தார். இனி வரும் காலம் உயர் கல்விக்கு பொற்காலமாக இருக்கும்.
இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உயர் கல்விக்கு இந்த பல்கலைக்கழகம் உறுதுணையாக இருக்க வேண்டும். இங்கு கல்வி கற்க வருகை தரும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.
THANKS TO : HINDU TAMIL ISAI