செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே தாறுமாறாக ஓடிய டாரஸ் லாரி, அரசு பஸ் மற்றும் லாரிகள் மீது மோதியது. இதில், மாணவர்கள் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.செங்கல்பட்டு அடுத்த உள்ளாவூரில் இருந்து அரசு பஸ் இன்று காலை 9.30 மணிக்கு வாலாஜாபாத்துக்கு புறப்பட்டது. பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலர் இருந்தனர். சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது, பயணிகள் இறங்குவதும், ஏறுவதுமாக இருந்தனர். அந்த நேரத்தில் செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி அதிவேகமாக வந்த டாரஸ் லாரி, பஸ்சின் பின்புறம் வேகமாக மோதியது. இதில் பஸ்சின் பின்பகுதி நொறுங்கியது. பயணிகள் அலறி துடித்தனர்.
அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் 20 மாணவர்கள், 3 பயணிகள் என மொத்தம் 23 பேர் காயம் அடைந்தனர். மோதிய லாரி, கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் திரும்பி, எதிரே வந்த லாரி மீது மோதியது. அந்த லாரியின் பின்னால் வந்த 2 லாரிகள் அடுத்தடுத்து மோதியது.
இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து பாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.