அவினாசி விபத்து குறித்து பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ளவதற்காக 7708331194 என்ற அவசர உதவி எண்ணை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
திருப்பூர்,
பெங்களூருவில் இருந்து கொச்சின் நோக்கி கேரள அரசுக்கு சொந்தமான சொகுசு பேருந்து 48 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, டைல்ஸ் ஏற்றிக்கொண்டு வந்த கண்டெய்னர் லாரியுடன் மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் உயிரிழந்தனர். விபத்தில் பலியானவர்களின் உடலை அடையாளம் காணும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிக்க பாலக்காடு மாவட்ட ஆட்சியரை நிகழ்விடத்திற்கு செல்லுமாறு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். தமிழக அரசுடன் இணைந்து சாத்தியமான அனைத்து நிவாரண நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த விபத்து குறித்து பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ளவதற்காக 7708331194 என்ற அவசர உதவி எண்ணை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.