Monday , May 27 2024
Breaking News
Home / Politics / கஷ்மீரில் அமைதி
MyHoster

கஷ்மீரில் அமைதி

‘கஷ்மீர் அமைதிக்கு திரும்பி விட்டது. நான்தான் என் பதிவுகளில் கஷ்மீரைப் பிடித்து தொடர்ந்து தொங்கிக் கொண்டிருக்கிறேன்.’

…என்று பாஜக அபிமானிகள் புகார் வைக்கிறார்கள்.

கஷ்மீர் அமைதியடைந்து விட்டது என்று எதை வைத்து சொல்கிறார்கள் என்று புரியவில்லை. எப்படி என்று கேட்டால் சில பல கஷ்மீரிகள் சிலாகித்துப் பேசும் யூடியூப் வீடியோக்களை காட்டுகிறார்கள்.

தரவுகள் என்று பார்த்தால் நடப்பு ஆண்டுக்கான டேட்டா இன்னமும் கிடைக்கவில்லை. அதற்கு முந்தைய ஆண்டுகளைப் பார்ப்போம். சென்ற ஆண்டு – 2022ல் – மொத்தம் 187 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தம் 117 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. 125 தீவிரவாத சம்பவங்கள் முயற்சி செய்யப்பட்டுள்ளன. தீவிரவாதத்துக்கு எதிரான ராணுவ முயற்சிகள் 111 நடந்திருக்கின்றன. 2021ல் 180 தீவிரவாதிகள் கொலையுண்டு இருக்கிறார்கள். 95 தீவிரவாத எதிர் முயற்சிகள் நடந்திருக்கின்றன.

இதை நான் சொல்லவில்லை: உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் தெரிவித்திருக்கிறார். [1]

அதாவது மத்திய அரசே கொடுத்த தரவின்படி ஆண்டுக்காண்டு தீவிரவாத நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. கொஞ்சமும் குறையவில்லை. இதில் ஆச்சரிய முரண் என்னவெனில் இத்தனை தீவிரவாத நிகழ்வுகளை வைத்துக் கொண்டு கஷ்மீரில் அமைதி தவழ்கிறது என்று சொல்லும் இதே இந்துத்துவ வாய்கள்தான் தமிழ் நாடு கேரளாவில் ஏதோ ஒரு ரவுடி கலாட்டா செய்தால் சட்டம் ஒழுங்கு நசிந்து போய் விட்டது என்று அங்கலாய்க்கிறார்கள்.

கஷ்மீரில் மொத்தம் 1.3 லட்சம் ராணுவத்தினர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ராஷ்டிரிய ரைஃபிள் வீரர்கள் சுமார் 60,000 பேர் இருக்கிறார்கள். இது எதுவும் குறைக்கப்படும் முனைப்புகள் வரவில்லை. [2] மத்திய அரசு தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறது. ஆனால் நடைமுறையில் எதுவும் நிகழவில்லை. AFSPA எனும் ராணுவ கொடுங்கோல் சட்டம் இன்று வரை அமுலில் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் கஷ்மீரில் பாதுகாப்பு கவுன்சிலில் ஆற்றிய உரையில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கஷ்மீரில் முழு அமைதி திரும்பும் வரை இந்த சட்டத்தை திரும்பப் பெற முடியாது என்று பேசி இருக்கிறார். [3] அதாவது AFSPAவை திரும்பப் பெறும் நிலை வரவில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

கடைசியாக கஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் 2014ல்தான் நடந்தது. 2019 ஆகஸ்ட் மாதம் செக்சன் 370ஐ நீக்கி, ஜம்மு கஷ்மீர் மாநிலத்தை மூன்று யூனியன் டெரிட்டரியாக மாற்றிய பின் பிரதமர் மோடி தேசத்துக்கு உரையாற்றினார். அதில் அந்தப் பிராந்தியத்தில் சகஜ நிலை திரும்பிய பின் மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இன்று வரை மாநில அந்தஸ்து திருப்பப்படும் எந்த முயற்சியும் துவங்கவில்லை.

அதாவது தீவிரவாதம் குறையவில்லை. அதிகரித்து வருகிறது. ராணுவம் குறைக்கப்படவில்லை. AFSPA திரும்பப் பெரும் முயற்சிகள் இப்போதைக்கு நடக்காது என்று அரசே சொல்கிறது. மாநில அந்தஸ்து திரும்ப வரும் அறிகுறிகள் எதுவுமில்லை. தேர்தல்கள் எதுவும் அறிவிக்கப்படும் சாத்தியமும் தெரியவில்லை. சுதந்திர ஊடகங்கள் எதுவும் இப்போதைக்கு அங்கே இல்லை. இருந்த சிலவும் 2019ல் முடக்கப்பட்டவைதான். இன்னமும் திரும்ப வரவில்லை. இதையெல்லாம் வைத்துக் கொண்டுதான் அமைதி திரும்பி விட்டது என்று பேசுகிறார்கள்.

என்னைப் பொருத்தவரை, இன்றைய அணுகுமுறைகளை வைத்து அங்கே அமைதி திரும்புவது சாத்தியமே இல்லாத ஒன்று. காரணம், கஷ்மீரில் 370 நீக்கப்பட்டது ஒரு கொடூர வரலாறு. ஓராண்டுக்கும் மேல் அந்த மாநிலம் லாக்டவுனில் இருந்தது. ஆறு மாதத்துக்கும் மேல் தொலைபேசி, இணையம் துண்டிக்கப்பட்டிருந்தது. ஊடகங்கள் முடக்கப்பட்டன. அனைத்து அரசியல் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். சகட்டு மேனிக்கு இளைஞர்கள் கைதாகினர். ஆத்திர அவசரத்துக்கு ஆஸ்பத்திரிக்குக் கூட செல்ல இயலாத சூழல் நிலவியது. கஷ்மீர் செல்ல முயன்ற ராகுல் காந்தி ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்பப்பட்டார். வரலாற்றில் காணாத கொடூரங்களை அந்த இரண்டு ஆண்டுகள் கஷ்மீரிகள் அனுபவித்தனர்.

நீங்கள் காங்கிரஸ்காரராக, உடன்பிறப்பாக, கம்யூனிஸ்ட்டாக, இந்துத்துவராகவெல்லாம் இருக்க வேண்டாம். சாதாரண மானுடராக இருந்தாலே இவை உங்களுக்கு அவலமாகத் தோன்றும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு இந்தியனாக நீங்கள் கூனிக் குறுகும் சாத்தியம் இருக்கிறது. (நீங்கள் ஒரு கொடூர அரக்கனாக இருந்தால் இவற்றைக் கொண்டு புளகாங்கிதம் அடையும் சாதியம் இருக்கிறது.)

கில்லி படத்தில் தனலட்சுமியைக் கவர முத்துப்பாண்டி அவள் மீது கொடும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவான். மத்திய அரசின் செய்கையை இந்தப் படத்துடன் ஒப்பிட்டு நான் அப்போதே எழுதினேன். [4]

370ஐ நீக்கியது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் நேற்று கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்:

‘We cannot postulate a situation that “ends justify the means”… Means must be consistent with the ends.’

‘நீங்கள் அடைய விரும்பும் இலக்குக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று கருத முடியாது. உங்களின் இலக்கும் அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளும் ஒத்ததாக இருக்க வேண்டும்.’

அதாவது கஷ்மீரில் அமைதி வேண்டும் எனும் இலக்கை அமைதி வழியில் போய்தான் சாதிக்க முடியும். ஆனால் நாமோ வன்முறை அமைதியை மீட்கும் என்று நம்புகிறோம். சில பல விதிவிலக்குகளைத் தவிர கடந்த 30 ஆண்டுகளாக கொடும் வன்முறையை அங்கே இந்தியா கட்டவிழ்த்து வருகிறது. சொல்லொணாக் கொடுமைகளை கஷ்மீரில் அப்பாவி மக்கள் அனுபவித்து வருகிறார்கள். சும்மா நாலு சாலைகளை கூடுதலாக கட்டி, மூன்று மேம்பாலங்களை அமைத்து, இவற்றைக் காட்டி அவர்களின் நன்மதிப்பை சம்பாதிக்க முடியாது. என்ன, மூன்று நான்கு அடிமைகளை பேசச் சொல்லி யூடியூபில் வீடியோ போட்டு ‘பார், அங்கே அமைதி திரும்பி விட்டது,’ என்று காட்டுவது இந்துத்துவர்களுக்கு சுகமாக சொறிந்து விட்டுக் கொள்ள உதவலாம். ஆனால் மேலே குறிப்பிட்டது போல உண்மை நிலை அரசுக்கே தெரியும்.

கஷ்மீரிகளின் மனத்தாங்கல்களையும் ஆதர்சங்களையும் கருத்தில் கொள்ளாமல், கூடவே பாகிஸ்தானையும் உள்ளடக்காமல் முன்னெடுக்கப்படும் எந்த ஒரு தீர்வும் நிரந்தரத் தீர்வாக இருக்காது. இருக்கவும் முடியாது. ராணுவத்தை குவித்து, மனித உரிமைகளை நசுக்கி கொண்டு வரப்படும் அமைதி செய்தித் தாள்களில் முழுப்பக்க விளம்பரங்களுக்கும், பக்தர்களின் சொறிந்து கொள்ளுதலுக்கும் பயன்படலாம். அதைத் தாண்டி அதனால் வேறு எந்தப் பயனும் கிடையாது.

  • ஸ்ரீதர் சுப்ரமணியம்
Bala Trust

About Admin

Check Also

https://youtu.be/8tyXItylzhA

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES