Sunday , December 3 2023
Breaking News
Home / செய்திகள் / தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்: காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை
MyHoster

தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்: காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்: காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (நவ.14) காலை ஒருகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகளில் இன்று நிலவக்கூடும்.

இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழகம், புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் நாளை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் 27 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

முதல்வர் ஆய்வு: இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள மாநிலஅவசரகால செயல்பாட்டு மையத்தில்முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலைஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்துகடலூர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர், கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரனையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனமழை குறித்து கேட்டார்.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு, பொறுப்புஅமைச்சர்கள், சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகள் உடனடியாக சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், முதல்வரின் செயலர் எம்.முருகானந்தம், பேரிடர் மேலாண்மை இயக்குனர் சி.அ.ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சம்பா பயிர்கள் மூழ்கின: நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை இடைவிடாமல் கனமழை பெய்தது. வேளாங்கண்ணியில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த, 25 நாட்களே ஆன இளம் சம்பா பயிர்களில் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள புங்கனூர், மருவத்தூர், எடக்குடி, வைத்தீஸ்வரன் கோவில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைநிலங்களில் நீர் தேங்கியுள்ளது. இதனால், 8 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மூழ்கின. மழைநீரை வடிய வைக்கும்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Bala Trust

About Admin

Check Also

மதுரையில் வள்ளல் பாண்டித்துரை தேவரின் சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் தமிழ்ச்சங்கம் நிறுவிய வள்ளல் பொன்.பாண்டித்துரை தேவரின் 112 வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது திருவுருவச் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES