மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியின் பாரம்பரிய உயிரினமான “கடமா” எனும் காட்டுமாடுகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வனத்துறை முடிவெடுத்திருப்பது பெரிதும் வருத்தமளிக்கும் விஷயம்.
இவர்களுக்கு எப்படி இவ்வளவு குரூரமான சிந்தனை தோன்றியதோ தெரியவில்லை. ஏற்கனவே “கடமா”க்களின் எண்ணிக்கை சில ஆயிரங்கள் மட்டுமே உள்ளன.
மனிதர்-விலங்கு எதிர்கொள்ளலுக்கு எவ்வகையிலும் விலங்குகள் பொறுப்பாகாது.
சுற்றுலா, காடழிப்பு, வன எல்லைகள் சுருங்குதல், பல்லுயிர் பாதுகாப்பில் அலட்சியம், வனத்தில் பணப்பயிர் அதிகரிப்பு, தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை என இவ்விஷயத்தின் தொடர்ச்சி ஆழமானது.
உண்மையில் புலி உள்ளிட்ட ஊன் உண்ணிகளின் இருப்பும் பெருக்கமுமே கடமாக்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்துவிடும்.
மனிதர் விலங்கு எதிர்கொள்ளல் பிரச்சனையை பன்முகத் தளத்தில் நோக்க வேண்டும். மாறாக “கடமா”க்கள் அத்துமீறி மனிதக் குடியிருப்புகளில் நுழைவதாகவும், அவற்றைப் பிடித்து குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் இப்பிரச்சினையை தீர்க்கலாம் என்பது குரூரமான ஆதிக்க சிந்தனையே.
மனிதர்களின் கொட்டம் கூடிக்கொண்டே போகிறது. நிச்சயம் இதற்கான விலையை நாம் ஒருநாள் கொடுக்க வேண்டிவரும்..
செய்தியாளர் : நா.யாசர் அரபாத்