Sunday , April 21 2024
Breaking News
Home / கரூர் / கரூர் அருகேயுள்ள குண்டலீஸ்வரர் கோவிலில் மலைக்குன்றின் மீது வற்றாத பொற்றாமரை குளம்…
MyHoster

கரூர் அருகேயுள்ள குண்டலீஸ்வரர் கோவிலில் மலைக்குன்றின் மீது வற்றாத பொற்றாமரை குளம்…

கரூர் அருகேயுள்ள குண்டலீஸ்வரர் கோவிலில் மலைக்குன்றின் மீது வற்றாத பொற்றாமரை குளம் உள்ளது. இவற்றை தொல்லியல்துறை ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேர, சோழ, பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள், மைசூர் மன்னர்கள் உள்ளிட்டோர் கரூரை முக்கிய வணிகத்தலமாக கொண்டு அந்த காலத்தில் ஆட்சி செய்த சிறப்பு உண்டு. அதற்கு ஆதாரமாக கரூர் அமராவதி ஆற்றங்கரையில் ரோமானிய நாணயங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதோடு மட்டும் அல்லாமல் சித்தர் ,கருவூரார் உள்ளிட்டோர் வாழ்ந்ததால் ஆன்மிக ரீதியாகவும், “ பல்வேறு போர்களை கண்டிருப்பதால் வரலாற்று ரீதியாகவும் சிறப்பு வாய்ந்த இடம் கரூர் ஆகும். அதோடு இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் கரூரானது “வஞ்சி நகர்” என குறிப்பிடப்படுகிறது. இதில் மற்றும் ஒரு சிறப்பாக பொன்னர்-சங்கர் ஆகிய மன்னர்களின் தந்தை குன்னுடையான் கரூர் சுக்காலியூரை அடுத்த செட்டிப்பாளையம் பகுதியில் அமராவதி ஆற்றங்கரையையொட்டியவாறு மலைக்குன்றின் மீதுள்ள குண்டலீஸ்வரர் எனும் சிவன் கோவிலில் வழிபாடு செய்து வாழ்ந்ததாகவும், அந்த கோவிலிலேயே பாறையை குடைந்து குழிபோட்டு அதில் பந்தல் அமைத்து அங்கு அவருக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்போதும் கூட வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் பலர் இந்த கோவிலுக்கு வந்து சிவனை தரிசனம் செய்து செல்வதோடு, குன்னுடையான் நினைவு கூர்ந்து செல்கின்றனர்.

⭐வறுத்த நெல்மணிகள் விளைச்சல் பெற்றது

செட்டிப்பாளையத்தில் குன்னுடையான் வாழ்ந்தது குறித்து அப்பகுதி மூத்த குடிமக்களிடம் கேட்ட போது கூறியதாவது:-

செட்டிப்பாளையத்தில் உள்ள குண்டலீஸ்வரர் உடனாய குங்குமவள்ளி கோவில் பல 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் தான் கரூர் பகுதியில் வசித்து வந்த குன்னுடையா தனது சகோதரர்களுடன் வசித்தார். இந்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட உள்பூசலின் காரணமாக தீயில் வாட்டி வறுத்த நெல்லினை குன்னுடையானுக்கு கொடுத்து விவசாயம் செய்து பிழைத்து கொள்ளுமாறு கூறி அனுப்பினர். இதைத்தொடர்ந்து செட்டிப்பாளையத்துக்கு வந்த அவர், குண்டலீஸ்வரர் கோவில் மலைக்குன்றின் உச்சியிலுள்ள பொற்றாமரை குளத்தில் அந்த நெல்லினை நனைத்து அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் ஆதரவுடன் அந்த நெல்லினை விதைத்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக வறுத்த நெல்லானது நன்கு விளைச்சல் பெற்றது. இதனால் இறைவனின் மகிமையை உணர்ந்த குன்னுடையான் அங்கேயே தனது வாழ்வியலை அமைத்து கொண்டு, சிவனை வழிபட்டார்.

⭐பந்தல் அமைக்க பாறையில் குழிகள்

பின்னர் குண்டலீஸ்வரர் கோவிலிலேயே அவருக்கு தாமரை என்பவருடன் திருமணமானது. அந்த திருமணத்தின் போது மலைக்குன்றில் பந்தல் அமைப்பதற்காக குழிகள் அமைக்கப்பட்டன. அது தற்போதும் கூட பழமை மாறாமல் அப்படியே காட்சி தருகிறது. வழிபாட்டுக்கு வருகிற பக்தர்கள் குன்னுடையனின் திருமண பந்தல் அமைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து விட்டே தற்போதும் செல்கின்றனர். இதற்கிடையே பின்னாளில் குழந்தை பேறு இல்லாமல் மனவருத்தம் அடைந்த குன்னுடையான்-தாமரை ஆகியோர் கோவிலிலுள்ள குங்குமவள்ளி தாயாருக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தி, உணவு பரிமாறினர். இதைத்தொடர்ந்து தான் தாமரை கருவுற்று பொன்னர்-சங்கர் மற்றும் மகள் உள்ளிட்டோர் வரிசுகளாக பிறந்தனர். இதன் காரணமாகவே சித்திரை 1-ந்தேதி அன்று குங்குமவள்ளிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது. குழந்தைபேறு இல்லாதவர்கள் இதில் பங்கேற்றால் நிச்சயம் அவர்களுக்கு குழந்தைபேறு கிட்டும் என்பது ஐதீகம் ஆகும். இதைத்தவிர பவுர்ணமி கிரிவல நிகழ்ச்சியும் விமரிசையாக நடக்கிறது என்று தெரிவித்தனர்.

⭐வற்றாத பொற்றாமரை குளம்

கரூர் மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. அமராவதி ஆற்றில் நீர் இல்லாததால் அது பாலைவனம் போல் மணற்பாங்காக காட்சி தருகிறது. எனினும் ஆற்றங்கரையை ஒட்டியபடி உள்ள குண்டலீஸ்வரன் கோவிலில் மலையின் மீதுள்ள பொற்றாமரை குளத்தில் தண்ணீர் வற்றாமல் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. மேலும் அந்த குளத்தினை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாத்து வருகின்றனர். முன்பெல்லாம் அந்த குளத்து நீரை எடுத்து தான் சிவனுக்கு அபிஷேகம் நடத்தப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த குளத்து நீர் ஒருபோதும் வறண்டு விடாதாம். மாறாக தண்ணீரின் அளவு குறைகிற போது தானாகவே மழை பெய்து இந்த குளம் நிரம்பும் என கூறப்படுகிறது.

⭐வரலாற்று பின்னணி ஆவணப்படுத்தப்படுமா?

மேலும் வருணனை பொழிவிக்கம் குண்டலிங்க சக்தியை பெற்றிருப்பதால் இந்த கோவில் குண்டலீஸ்வரர் எனவும் வழங்கப்படுகிறது. எனினும் பல ஆண்டுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் போதிய வரலாற்று ஆதார தகவல் இல்லாதது பக்தர்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே கரூர் தொல்லியல் துறையினர் இந்த கோவில் கல்வெட்டுகளை ஆய்வு செய்து அதன் விவரங்களை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் இந்த கோவிலுக்கு போதிய பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் கரூருக்கும் பொன்னர்-சங்கருக்கும் உள்ள பிணைப்புகள் என்ன? காலத்தின் கையில்….

 

Bala Trust

About Admin

Check Also

தெலுங்கு, கன்னடம் பேசும் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் உகாதி புத்தாண்டு வாழ்த்து!

தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் உகாதி, புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES